தமிழ் சினிமாவில் கோலோச்சும் முன்னணி நடிகர்கள் தங்களது அடுத்த கட்ட நகர்வாக அரசியலை நோக்கிப் பயணிப்பது காலம் காலமாகத் தொடரும் வழக்கம் தான். அந்த வரிசையில், தற்போது கோலிவுட் வட்டாரத்தில் படுவேகமாக அடிபடும் பெயர் நடிகர் தனுஷ். சினிமாவில் பிசியாக இருந்தாலும் தனது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் வேலைகளில் அவர் இறங்கியுள்ளது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது ‘கர’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘ஓம்’ படத்தில் பிசியாக நடித்து வரும் தனுஷ், அடுத்தடுத்து மேலும் 3 படங்களில் கமிட்டாகி செம பிசியாக உள்ளார். இருப்பினும், தனது ரசிகர் நற்பணி மன்றங்களை பலப்படுத்தும் பணிகளுக்கும் அவர் நேரம் ஒதுக்கி வருவதுதான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
தமிழகத்தை 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரித்து மாவட்டத் தலைவர்களை நியமித்துள்ள தனுஷ் தரப்பு, தற்போது தொகுதி வாரியாகவும் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் அதிரடியாக நடந்து வருகின்றன. அன்னதானம், ரத்ததானம், கல்வி உதவித்தொகை எனத் தொடர்ந்து நலத்திட்டங்களைச் செய்து வரும் மன்றங்கள், இப்போது தேர்தல் கள வியூகம் போல வலுப்படுத்தப்படுவது “தனுஷின் அரசியல் வருகைக்கான அச்சாரமா?” என்ற கேள்வியை அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஷாலிடம் தனுஷின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த விஷால், “தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர் அப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால் என் முதல் வாழ்த்துகள். மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; ஆனால் மக்கள் சேவை என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதேசமயம், தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மற்றும் இயக்குநர், அவர் முழுமையாக அரசியலுக்குச் சென்றால் தமிழ் சினிமா மற்றொரு சிறந்த நடிகரை இழக்க நேரிடும்” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.
