எஃப்.சி.ஆர்.ஏ அதிகாரப்பூர்வ இணையதளத் தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது 14,430 தொண்டு நிறுவனங்கள் மட்டுமே மத்திய அரசின் உரிய சான்றிதழ் பெற்றுச் செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில், 22,496 அமைப்புகளின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 15,230 அமைப்புகளின் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட மற்றும் காலாவதியான மொத்தம் 37,726 தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களை மத்திய அரசு விரைவில் கையகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பாதிக்கப்படும் அமைப்புகளில் பெரும்பாலானவை கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொண்டு நிறுவனங்கள் செயல்படும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மாநிலத்தில் மொத்தம் 6,743 தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன.

ஆனால், இந்த 6,743 அமைப்புகளில் வெறும் 2,100 நிறுவனங்களிடம் மட்டுமே தற்போது செல்லுபடியாகும் எஃப்.சி.ஆர்.ஏ சான்றிதழ்கள் கைவசம் உள்ளன. எஞ்சிய ஆயிரக்கணக்கான அமைப்புகளின் சான்றிதழ்கள் ரத்து மற்றும் காலாவதியான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

“>

 

இதனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் நாட்டிலேயே அதிக அளவிலான பாதிப்பைச் சந்திக்கப் போகும் மாநிலமாகத் தமிழ்நாடுதான் இருக்கும் என்று வன்னி அரசு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.