தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது கார்களை அடித்து நொறுக்கிப் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாகனத்தை முந்திச் செல்வதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதே இந்த மோதலுக்குக் காரணமாகும். மேலும், சண்டையில் ஈடுபட்ட பெரும்பாலான நபர்கள் போதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கில் தொடர்புடையவர்களில் இருவர் பிரபல சினிமா தியேட்டர் உரிமையாளரின் மகன்களும், தவெக மாவட்டச் செயலாளரின் உறவினர்களும் ஆவர். மேலும், இவர்களின் தந்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இரு தரப்பினரும் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டதாகக் கூறி வழக்கை முடிக்க முயன்ற நிலையில், எஸ்.பி.யின் நேரடி உத்தரவின் பேரில் காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மோதலில் சேதமடைந்த கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற நான்கு பேரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

“>

 

பொதுவெளியில் நல்வாழ்வுக்கும் சட்டம்-ஒழுங்கிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இது போன்ற வன்முறைச் செயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல் துறையின் எச்சரிக்கை அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.