கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாகவும், உலகிலேயே மிகவும் செல்வந்தரான கிரிக்கெட்டுக்கான கட்டுப்பாட்டு வாரியமாகவும் வலம் வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம். உலகக் கிரிக்கெட் உலகமே பி.சி.சி.ஐ-யை மையமாகத்தான் சுழன்று வருகிறது என்றே கூறலாம். இத்தகைய புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பணியாற்றுவது என்பது பலரது வாழ்நாள் கனவாகவும் மிகப்பெரிய வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இவ்வளவு பெரிய அமைப்பில் கடந்த ஒன்றரை ஆண்டகுகளுக்கும் மேலாக ஒரு மிக முக்கியமான பதவிக்கு ஆள் கிடைக்காமல் காலியாகவே கிடக்கிறது என்பதுதான் நம்ப முடியாத நிதர்சன உண்மை. அதுவும் இந்திய கிரிக்கெட்டுக்கு இந்தத் தருணத்தில் அந்தப் பதவி மிகவும் அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பதவியின் பெயர் வேறு ஒன்றுமில்லை; பி.சி.சி.ஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மையத்தின் ‘ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் அண்ட் மெடிசின்’ (Sports Science and Medicine) துறையின் தலைவர் பதவியாகும்.
கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, பெங்களூருவில் உள்ள CoE மையத்தின் 2-வது ஆண்டு நிறைவையொட்டி, பி.சி.சி.ஐ-யின் உயர்மட்டப் பதவியில் உள்ள அனைத்து முக்கிய நிர்வாகிகளும் அங்கு கூடினர். இந்தச் சிறப்புக் கூட்டத்தில் மையத்தின் இயக்குநரான வி.வி.எஸ். லட்சுமணும் கலந்துகொண்டார். அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மையத்தின் சாதனைகள் குறித்துப் பேசப்பட்டாலும், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் ஒட்டுமொத்தக் கவனமும் ஒரு முக்கியமான கேள்வியின் மீதுதான் திரும்பியது. “தற்போதைய இந்திய அணியின் வீரர்களுக்கு அடிக்கடி ஏன் இவ்வளவு காயங்கள் ஏற்படுகின்றன? அவர்களின் உடல் தகுதி மற்றும் மீண்டுவரும் செயல்முறை ஏன் சரியாக இல்லை?” என்பதே அந்தத் தலையாய கேள்வியாக இருந்தது.
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த வி.வி.எஸ். லட்சுமணன், சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தின் தற்போதைய மிகப் பெரிய சவாலையும் வெளிப்படையாக உடைத்துப் பேசினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் துறையின் தலைவருக்கான நிரந்தர நியமனத்தை மேற்கொள்ள பி.சி.சி.ஐ பெரும் சிரமப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த மார்ச் 2025-ல் இந்தத் துறையின் தலைவராக இருந்த நித்தின் படேல் தனது பதவியிலிருந்து விலகிய நிலையில், அன்றிலிருந்து இன்று வரை அந்தப் பதவிக்கு உரிய நபரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது; ஆனால் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.
இதன் பொருள் பி.சி.சி.ஐ-யுடன் யாரும் வேலை செய்ய விரும்பவில்லையா அல்லது தகுதியான நபர்கள் கிடைக்கவில்லையா என்றால், இரண்டும் ‘இல்லை’ என்பதே பதிலாகும். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒரு நிபுணர் குழுவின் உதவியுடன் மூன்று முன்னணி வேட்பாளர்களிடம் பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
முதலில் இந்திய அணியின் முன்னாள் பிசியோதெரபிஸ்ட் ஆன்ட்ரூ லீபஸ் என்பவருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், கடைசி நேரத்தில் தனது சொந்த மற்றும் குடும்பக் காரணங்களைக் கூறி அவர் அப்பதவியை ஏற்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொரு நிபுணருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது; ஆனால் அவரோ பெங்களூருவுக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள முடியாது என்று பின்வாங்கிவிட்டார். அதேபோல், நியூசிலாந்து ரக்பி அணியுடன் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் நிபுணர் ஒருவரும் இறுதி நேரத்தில் இந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்தச் சிக்கலுக்கான முக்கியக் காரணம், CoE மையம் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்தான். அதாவது, இந்தப் பணி எக்காரணம் கொண்டும் ‘பகுதி நேர வேலையோ அல்லது வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையோ கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் நபர் கண்டிப்பாக பெங்களூருவிலேயே நிரந்தரமாகத் தங்கி, தினமும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்திற்கு வந்து வீரர்களின் உடல் தகுதியைக் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்; அத்துடன் தனது மருத்துவக் குழுவையும் திறம்பட வழிநடத்த வேண்டும். இந்த நிபந்தனையினால்தான் பலரும் பெங்களூருவுக்குக் குடிபெயரத் தயங்குகிறார்கள்.
இது தவிர, இந்திய கிரிக்கெட் கட்டமைப்பின் தனித்துவமான தேவைகளை ஆழமாகப் புரிந்து கொண்ட நிபுணராக இருக்க வேண்டும் என்பதும் மற்றொரு தகுதியாகும். இந்தத் தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தாமதத்தின் தாக்கம் ஒரு மூலையில் இந்திய வீரர்களின் ஃபிட்னஸ் மீதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
