சர்வதேச சந்தையின் பொருளாதார நிலவரம் மற்றும் கரன்சி மதிப்புகளுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் விலை குறைந்து சற்று ஆறுதல் அளித்தது. ஆனால், இன்றைய நாளின் தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இன்றைய நிலவரப்படி, காலை நேரத்தில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,400 வரை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் இனி தங்கம் வாங்குவது மக்களுக்கு எட்டாக்கனிதான் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்தது. காலை வேளையில் தங்கம் விலையைக் கண்டு ஷாக் ஆகியிருந்த வாடிக்கையாளர்களுக்கும் நகை பிரியர்களுக்கும், மாலையில் ஒரு குட் நியூஸ் காத்திருந்தது.

மாலை நேர நிலவரப்படி, காலை ஏறிய வேகத்தில் தங்கம் விலை அதிரடியாகக் குறையத் தொடங்கியது. இதன் மூலம் சவரனுக்கு ரூ. 800 வரை விலை குறைந்துள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 1,13,200 என்ற விலையிலும், ஒரு கிராம் தங்கம் ரூ. 14,150 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலை நேரத்தில் கிடுகிடுவென உயர்ந்து கலங்கடித்த தங்கம், மாலையில் சற்று விலை குறைந்துள்ள இந்த திடீர் மாற்றம், நகை பிரியர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.