தமிழகத்தில் மதுபான விற்பனை மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ என்ற புதிய வரியை விதிப்பதற்கான சட்ட முன்வடிவு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அது சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுபானக் கொள்கலன்களை முறையாக மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல், மற்றும் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மீட்புத் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற பல்வேறு சமூக நலன் சார்ந்த நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட முன்முடிவின்படி, தமிழ் நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய மசோதாவுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மதுபானத்தின் வகை, அளவு மற்றும் கொள்கலனின் தன்மை அதாவது கண்ணாடி பாட்டில், கேன் அல்லது டெட்ரா பேக் ஆகியவற்றிற்கு ஏற்ப இந்தச் சுற்றுச்சூழல் செஸ் வரி மாறுபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறிய அளவிலான பாட்டில்களுக்குக் குறைந்த தொகையும், பெரிய பாட்டில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 20 வரை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆளுநரின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு இந்த புதிய சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்பதால், தமிழகத்தில் மதுபானங்களின் சில்லறை விற்பனை விலை கணிசமாக உயரவுள்ளது. இதன் மூலம் மதுவினால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அதற்கான மீட்புப் பணிகளுக்கான நிதி ஆதாரமும் திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.