மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், தங்களது செல்போனைப் பறித்துச் சென்ற திருடனை, இரு இளம் சகோதரிகள் தங்களது ஸ்கூட்டரால் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த துணிச்சலான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குவாலியர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ஹர்ஷிதா அகர்வால் மற்றும் ரசிதா அகர்வால் இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தங்களது ஸ்கூட்டரில் கல்லுரிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, பைக் ஒட்டி வந்த மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரசிதாவின் கையிலிருந்த செல்போனை திடீரெனப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றான்.
#WATCH | Two Sisters Chase Mobile Snatcher On Scooty At 80 Km/H, Catch Him In Gwalior; Locals Help Hand Him Over To Police #MPnews #MadhyaPradesh pic.twitter.com/s47IYmkjU8
— Free Press Madhya Pradesh (@FreePressMP) August 9, 2026
திருட்டுச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தாலும், சற்றும் தைரியத்தை இழக்காத அந்தச் சகோதரிகள் உடனடியாகத் தங்களது ஸ்கூட்டரைத் திருப்பித் திருடனைப் பின்தொடர்ந்து விரட்டினர். பரபரப்பான சாலையில் சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் தங்களது ஸ்கூட்டரை இயக்கிய அவர்கள் அந்தத் திருடனை விடாமல் துரத்திச் சென்றனர்.
அப்போது திடீரென எதிரே ஒரு டெம்போ வாகனம் வர, தப்பிக்க முயன்ற திருடன் பைக்கை திசைதிருப்பியுள்ளான். இதைப் பயன்படுத்திக் கொண்ட துணிச்சலான சகோதரிகள், தாங்கள் ஓட்டிவந்த ஸ்கூட்டரைக் கொண்டு அவனது பைக்கின் மீது மோதி கீழே தள்ளினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த திருடனை, அந்தச் சகோதரிகள் உடனே பாய்ந்து பிடித்துச் சட்டையைப் பிடித்துக் கொண்டு சரமாரியாக அறைந்தனர்.
இவர்களது சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு ஓடிவந்த பொதுமக்கள், செல்போன் திருடியது யார் என்பதைத் தெரிந்துகொண்டு சகோதரிகளுக்கு உதவி செய்தனர். பின்னர் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அந்த நபர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், சிக்கிய நபர் பஞ்சாப்பைச் சேர்ந்த மன்ப்ரீத் என்பது தெரியவந்துள்ளது. அவர் குவாலியருக்கு வந்து வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே ஆவதாகவும், அங்குள்ள ‘டொமினோஸ்’ நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருவதாகவும் ஒப்புக்கொண்டார். வாடகைக்கு அறை எடுப்பதற்குப் பணத் தட்டுப்பாடு இருந்ததால், செல்போனை விற்று பணம் திரட்டவே இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
