உடற்பயிற்சி செய்யத் தொடங்குபவர்கள் பலருக்கும் “புஷ்-அப்ஸ் சிறந்ததா அல்லது ஸ்குவாட்ஸ் சிறந்ததா?” என்ற கேள்வி எழும். எந்த ஜிம் உபகரணமும் இல்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த இரண்டு பயிற்சிகளுமே உடலுக்குப் பல நன்மைகளைத் தருகின்றன. ஆனால், உங்கள் உடற்பயிற்சி இலக்கு என்ன என்பதைப் பொறுத்தே இவற்றில் எது சிறந்தது என்பது தீர்மானிக்கப்படுகிறது.
புஷ்-அப்ஸ் என்பது மேல்பகுதி உடலுக்கான சிறந்த பயிற்சியாகும். இதனைச் செய்யும்போது மார்பு, தோள்பட்டை, கைகள், வயிற்றுப் பகுதி மற்றும் முதுகுத் தசைகள் ஒரே நேரத்தில் செயல்படுகின்றன. உடலின் சமநிலையை மேம்படுத்தவும், மேல் உடல் வலிமையை அதிகரிக்கவும் புஷ்-அப்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மறுபுறம், ஸ்குவாட்ஸ் கீழ் பகுதிக்கான மிக முக்கியமான பயிற்சியாகும். தொடைகள், முழங்கால்கள், இடுப்பு மற்றும் பின்புறத் தசைகளின் வலிமையை அதிகரிக்க இது பெரிதும் உதவுகிறது. உட்காருவது, எழுவது, படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற அன்றாட செயல்பாடுகளுக்குத் தேவையான கீழ் உடல் வலிமையை ஸ்குவாட்ஸ் தருகிறது.
ஒரே நாளில் 100 அல்லது 200 முறை என அளவுக்கு அதிகமாகச் செய்வதை விட, முறையான வடிவில் சரியாகச் செய்வதே காயங்களைத் தவிர்க்க உதவும். எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த இரண்டுமே கலோரிகளை எரிக்கச் சிறந்த தேர்வாகும். மூட்டு வலி அல்லது தோள்பட்டை காயம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே இந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கு இந்த இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள் புஷ்-அப்ஸ், மறுநாள் ஸ்குவாட்ஸ் என இரண்டையும் இணைத்து தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் ஒதுக்கிப் பயிற்சி செய்து வந்தால் உடலின் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் இயக்கம் சிறப்பாக மேம்படும்.
