மத்தியப் பிரதேசம் ராய்சன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் விவசாய நிலம் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜூவல் கிஷோர் ரகுவன்ஷி என்ற நபரின் கொலை வழக்கு மர்மமான முறையில் இருந்த நிலையில், அதனைப் போலீசார் அதிரடியாகத் துப்பு துலக்கியுள்ளனர். கொல்லப்பட்ட நபருக்கும் கொலை செய்தவரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், இரண்டு சகோதரர்கள் இணைந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். ஜூவல் கிஷோரை விவசாய நிலம் அருகே வழிமறித்து அழைத்துச் சென்ற அந்தச் சகோதரர்கள், கையில் கிடைத்த கோடாரி மற்றும் மரக்கட்டையால் கண்மூடித்தனமாகத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஒன்றன்பின் ஒன்றாக ஆராய்ந்தும், சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும் போலீசார் குற்றவாளிகளை நெருங்கினர். இதில் அரவிந்த் மெஹ்ரா மற்றும் தீபக் மெஹ்ரா என்ற இரண்டு சகோதரர்கள் மீதுதான் போலீசாருக்குச் சந்தேகம் வலுத்தது. அவர்களைக் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது, மனைவியுடன் பேசிய ஆத்திரத்தில் திட்டமிட்டுக் கொலை செய்த உண்மையை அவர்கள் வாக்குமூலமாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து கொலையாளிகளிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடாரி மற்றும் மரக்கட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களைச் சிறையில் அடைத்துள்ளதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு தொலைபேசி உரையாடல் மற்றும் தவறான சந்தேகத்தின் பெயரில் இரண்டு சகோதரர்கள் இணைந்து அரங்கேற்றியுள்ள இந்த வெறித்தனமான கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
