மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் உள்ள அமூரா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்துள்ள வெட்கக்கேடான செயல் கல்வித் துறையினரையும் பெற்றோர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. பள்ளிக்குக் குடிபோதையில் வரும் அந்த ஆசிரியர், வகுப்பறைகள் மற்றும் வளாகத்திற்குள்ளேயே மலம் கழிப்பததோடு , சிறுவர்களையும் சிறுமிகளையுமே அந்த அசிங்கங்களைச் சுத்தம் செய்யும்படி மிரட்டி வருவதாகக் குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தன்னை மலம் அள்ளச் சொல்லி அந்த ஆசிரியர் துன்புறுத்தியதாகக் கூறியுள்ள அதிர்ச்சித் தகவல் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

வகுப்பு எடுக்க வேண்டிய நேரத்தில் பள்ளிக்கு மதியம் வரை தாமதமாக வரும் இந்த ஆசிரியர், எப்போது பார்த்தாலும் வாயில் குட்காவை மென்றுகொண்டு சுவர்களின் மீது துப்பி வளாகத்தை நாசமாக்கி வருவதாக கிராம மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர். மதிய உணவுத் திட்டத்தை முற்றிலுமாக முடக்கிவிட்டு, பள்ளி வளாகத்தையே தன் இஷ்டத்திற்குக் கேவலப்படுத்திவிட்டு, அதை சுத்தம் செய்யும்  வேலைகளை பிஞ்சு நெஞ்சங்கள் மீது திணித்துள்ளார். ஊடகவியலாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தபோதுகூட, போதை பிடியில் இருந்த அந்த ஆசிரியர் தன் டேப்லெட்டில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்தபடியே அலட்சியமாகப் பதிலளித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

தங்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் அந்தத் தலைமை ஆசிரியர் மறுத்த போதிலும், சுவர்களில் உள்ள குட்கா கறைகளையும் அவரது போதை நிலையையும் கண்டறிந்த அதிகாரிகள் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து வட்டாரக் கல்வி அலுவலர் ராஜேஷ் திவேதி உடனடியாகத் தலையிட்டு, சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குழந்தைகளின் உடல் மற்றும் மனநலனை சீரழிக்கும் வகையில் நடந்துகொண்ட இந்த கொடூரத் தலைமை ஆசிரியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய மாவட்டக் கல்வி அலுவலருக்குக் கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.