தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் திடீரெனக் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஒரே பள்ளியில் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவன், காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அந்தச் சிறுமியை ஏமாற்றி திண்டுக்கல் பகுதிக்கு அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து திண்டுக்கல் விரைந்த காவல்துறையினர், அங்கே பதுங்கியிருந்த சிறுவனைக் கைது செய்ய முயன்றபோது அவன் தப்பியோடியுள்ளான். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பத்திரமாக மீட்டுத் தேனி அழைத்து வந்து விசாரித்தபோது, அந்தச் சிறுவன் தன்னைத் திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமி கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தக் கோரச் சம்பவத்தில் சிறுவனுக்கு அவனது பெற்றோரே முழுமையாக உடந்தையாக இருந்தது விசாரணையில் அம்பலமானது. இதனைக் தொடர்ந்து, சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உடந்தையாக இருந்த பெற்றோரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்; மேலும், தலைமறைவாக உள்ள சிறுவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
