அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட F-1 மாணவர் விசாக்களின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் 62 சதவீதம் வரை மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது. மே முதல் ஆகஸ்ட் வரையிலான முதன்மையான சேர்க்கை காலத்தில், இந்திய மாணவர்களுக்கான விசா ஒப்புதல்கள் பெருமளவில் சரிந்த அதே வேளையில், சீனாவுக்கு இந்தச் சரிவு 34 சதவீதமாக மட்டுமே இருக்கிறது.
அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் சர்வதேச மாணவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் இருக்கும் சூழலில், இந்தத் திடீர் வீழ்ச்சி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டுள்ள இறுக்கமான விசா நடைமுறைகள், மாணவர் தங்குவதற்கான கால வரம்புக் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக ஊடகச் சான்றுகளை ஆய்வு செய்யும் கடுமையான பரிசோதனைகளே இந்த வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுகின்றன.
இந்தச் சரிவுக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான பின்னணி, அமெரிக்காவின் குடிவரவு மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகும். குறிப்பாக, படித்து முடித்த பிறகு மாணவர்கள் அங்கு தங்கிப் பணியாற்றுவதற்கான திட்டத்தில் இந்திய மாணவர்களின் பங்கேற்பு மிக அதிகமாக இருந்தது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த துறைகளில் பயிலும் இந்திய மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்று வந்தனர்.
ஆனால், உள்நாட்டு அமெரிக்கப் பணியாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதாகக் கூறி இந்த OPT திட்டத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது ரத்து செய்யவோ கோரும் ஆய்வறிக்கைகளும், அமெரிக்க அரசின் புதிய விதிமுறைகளும் விசா வழங்கும் நடைமுறையைக் கடுமையாக்கியுள்ளன. இதன் நேரடிப் பாதிப்பை இந்திய மாணவர்கள் அதிகம் சந்திக்க நேரிட்டுள்ளது.
சீனாவை விட இந்திய மாணவர்களின் விசா ஒப்புதல் இவ்வளவு பெருமளவில் சரிந்ததற்கு இரு நாட்டு மாணவர்களின் படிப்பு விருப்பங்களும் அதன் பின்னுள்ள எதிர்காலத் திட்டங்களுமே முக்கியக் காரணம். சீன மாணவர்கள் பலர் படிப்பை முடித்ததும் தாய்நாடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், பெரும்பாலான இந்திய மாணவர்கள் படிப்பிற்குப் பிறகு அமெரிக்காவிலேயே தங்கிப் பணியாற்றி தங்கள் தொழில் வாழ்க்கையை அமைக்க விரும்புகின்றனர்.
விசா நேர்காணலின் போது படிப்பிற்குப் பின் சொந்த நாட்டிற்குத் திரும்புவது தொடர்பான ஆய்வுகளில் பல இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. மேலும், விசா நேர்காணல் நேரங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்களும் இந்த சரிவுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன.
இருப்பினும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இப்போதும் அதிக எண்ணிக்கையில் சேரும் சர்வதேச மாணவர்களில் இந்தியர்களே முன்னணியில் உள்ளனர். ஆனால் தொடர்ந்து விசா கெடுபிடிகளும் அலைக்கழிப்புகளும் நீடித்தால், இந்திய மாணவர்கள் தங்கள் உயர்கல்விக்காக ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகளை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்பக் கூடும்.
