டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் ரோஹன் தவான், சமூக வலைதளமான லிங்க்ட்இனில் பகிர்ந்த பதிவு ஒன்று தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகளை வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவர், கையில் விலையுயர்ந்த ரோலெக்ஸ் கடிகாரம் அணிந்திருந்ததை பார்த்த அவர், அதன் அழகை பாராட்டியுள்ளார். அதற்கு அந்த தொழிலதிபர் கூறிய பதில்தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த தொழிலதிபர் அணிந்திருந்தது உண்மையான ரோலெக்ஸ் கடிகாரம் அல்ல என்றும், இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு பக்கத்தின் மூலம் சுமார் ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கிய ‘ஃபர்ஸ்ட் காப்பி’ கடிகாரம்தான் என்றும் தெரிவித்துள்ளார். சந்தையில் இதே மாதிரியான உண்மையான ரோலெக்ஸ் டேட்டோனா கடிகாரத்தின் விலை ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், போலி கடிகாரத்தையே பயன்படுத்துவதாக அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். “இன்றைய சமூகத்தில் என் பொருளாதார நிலையை அறிந்தவர்கள், நான் போலி கடிகாரம் அணிந்திருப்பேன் என்று நினைக்கவே மாட்டார்கள். கடிகாரத்தின் வேலை நேரத்தை காட்டுவதுதான். மற்றவர்கள் அதை உண்மையானது என்று நம்பும்போது, அதே தோற்றத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று அவர் கூறியதாக ரோஹன் தவான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆடம்பர வாழ்க்கை, வெளிப்படையான செல்வக் காட்சி மற்றும் தேவையற்ற செலவுகள் குறித்து புதிய விவாதத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. சிலர் அந்த தொழிலதிபரின் நடைமுறையான சிந்தனையை பாராட்டி கருத்து பதிவிட்டு வரும் நிலையில், மற்றவர்கள் இது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயம் என்றும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
