தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்தை (ரேஷன்) நவீனப்படுத்தும் வகையிலும் இரு அதிமுக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார்.
முதலாவதாக, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தும் நோக்கில் VB-G RAM G திட்டத்தின் துணைத் திட்டமாக ‘வெற்றி 150’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே 125 நாட்கள் பணி செய்து வரும் குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் பணி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிராமப்புற உழைக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவதாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்குக் கிடைக்கும் அத்தியாவசியப் பொருட்களின் தரத்தை உயர்த்தும் நோக்கில், “பொட்டலமிடப்பட்ட (Packeted) கோதுமை மாவு வழங்கும் முன்னோடித் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். மக்களுக்குத் தரமான மற்றும் துல்லியமான அளவிலான அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுவதை அரசு உறுதி செய்யும்.
இத்திட்டம் முதற்கட்டமாக முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் நவீனமயமாக்கல் திட்டத்திற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை 150 நாட்களாக உயர்த்தியதும், ரேஷன் கடைகள் மூலம் தரமான பொட்டலமிட்ட கோதுமை மாவு வழங்க முன்வந்திருப்பதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
