தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில், பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலத் தகராறு முற்றியதன் காரணமாக, கிராம மருத்துவர் ஒருவர் அவரது சொந்தக் கிளினிக்கிலேயே வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பகடாலா கிராமத்தைச் சேர்ந்த ஆர்.எம்.பி. மருத்துவர் போஜினி மல்லையா, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெந்தலவெல்லி மண்டலத்திற்கு வந்து தங்கி, அப்பகுதி மக்களுக்கு எளிய மருத்துவச் சேவையாற்றி வந்தார். இதனிடையே, அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிங்கி கிருஷ்மையா என்பவரின் குடும்பத்திற்கும் இடையே கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சொத்து விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து மோதல்கள் நிலவி வந்துள்ளன.

இந்தத் தகராறு காரணமாக இரு தரப்பினர் மீதும் மாறி மாறிப் புகார்கள் அளிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் மொத்தம் 14 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளதுடன், நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கும் நிலுவையில் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 31 அன்று இரவு நேரத்தில், மல்லையா தனது கிளினிக்கில் தனியாக இருந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்மக் கும்பல் அங்கு நுழைந்தது. திடீரென அவரது கண்களில் மிளகாய் பொடியைத் தூவித் திணறடித்த அந்த நயவஞ்சகர்கள், அவரை வலுக்கட்டாயமாக வெளியே வீதிக்கு இழுத்துச் சென்று கழுத்திலும் தலையிலும் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொன்றுவிட்டுத் தப்பியோடினர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து, கொல்லப்பட்ட மருத்துவரின் மனைவியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். மேலும், இக்கொலைக்கு மூளையாகச் செயல்பட்டுத் தூண்டிய சேகர் என்பவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல வருடங்களாக நீடிக்கும் சொத்துத் தகராறுகள் எந்தளவுக்கு விபரீதமான மனித அழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இச்சம்பவம் மற்றொரு சாட்சியாக அமைந்துவிட்டது.