மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தில், 8 மாத பெண் குழந்தையை மையமாகக் கொண்டு ஏற்பட்ட குடும்பத் தகராறு பரிதாபத்தில் முடிந்தது. பிராச்சி கல்பேஷ் பாட்டீல் (28) என்ற இளம்பெண், மாமனார் தள்ளியதால் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிராச்சி தனது மாமனாரால் தொடர்ந்து தொந்தரவுக்கு உள்ளாகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரை தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது சகோதரர் விஷால் அனந்த் பாட்டீல், விரார் மேற்கு பகுதியில் உள்ள நாரங்கி கிராமத்தில் இருக்கும் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, 8 மாத குழந்தை மாமனார் கண்பத் பாட்டீலின் தோளில் இருந்த நிலையில், குழந்தையை தன்னிடம் வாங்க முயன்ற பிராச்சிக்கும், மாமனாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கண்பத் பாட்டீல், மருமகளை தள்ளியதாக போலீசார் தெரிவித்தனர். இதில், பிராச்சி வீட்டின் டைல்ஸ் தரையில் தலை மோதி பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கண்பத் பாட்டீலை கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கொலைக்குச் சமமல்லாத உயிரிழப்பு, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
