பாலிவுட் நடிகை ஜியா கான் மரணம் அடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்த வழக்கின் தாக்கம் தன்னை விட்டு இன்னும் விலகவில்லை என்று பாலிவுட் நடிகர் சூரஜ் பஞ்சோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தன்னை அனைத்து வழக்குகளிலிருந்தும் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து விடுவித்திருந்த போதிலும் , இன்றும் பல ஆன்லைன் தளங்களில் இந்த வழக்கு தீர்க்கப்படாத ஒன்றாகவே சித்தரிக்கப்படுவது தனக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் தனது வயது வெறும் 20 மட்டுமே இருந்ததாகவும், இறந்த நடிகையுடன் தமக்கு நான்கு மாதங்கள் மட்டுமே பழக்கம் இருந்ததாகவும் சூரஜ் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் எதிர்ப்பட்ட மன அழுத்தங்களையும் சூழ்நிலைகளையும் கையாளும் பக்குவம் தன்னிடம் இருக்கவில்லை என்றும், ஆனால் அந்த ஒரே ஒரு சம்பவம் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிட்டதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தன் வாழ்க்கையின் மிக முக்கியமான 14 ஆண்டுகளைத் தனது நிரபராதரித் தன்மையை நிரூபிப்பதிலேயே செலவழித்துவிட்டதாக அவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இறந்த நடிகையின் தனிப்பட்ட அந்தரங்கங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே பல உண்மைகளைத் தான் பொதுவெளியில் பேசாமல் அமைதியாகக் கடந்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் உண்மையான ஆதாரங்களையும் மதிக்க வேண்டும் என்றும், தன்னைத் தொடர்ந்து குற்றவாளியாகவே பார்க்கும் பார்வையிலிருந்து மக்கள் மாற வேண்டும் என்றும் அவர் ஊடகங்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
