சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் புதியதாக 1,000 பேர் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கையில்தான் ஆட்சி சென்றுள்ளது. மக்கள் இயக்கமான நாங்கள் மக்களிடமே நிதியைக் கேட்கிறோம். ஆனால், பிளாக்கில் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களைத் ‘திரள்நிதி திருடர்கள்’ என்கிறது.
மக்களிடம் பெறும் திரள்நிதியில் ஒரு தேநீர்கூட அருந்த மாட்டோம். அதேபோல, என் மாமா ஒருவர் கார் வாங்கிக் கொடுத்து வீட்டு வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றதற்கு, சீமான் பென்ஸ் கார் வாங்கிவிட்டார் எனப் வதந்தி பரப்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் (தவெக) மற்றும் அதன் தலைவர் விஜய்யை விமர்சித்துப் பேசிய சீமான், “தமிழகத்தில் இத்தனை தொகுதிகள் இருக்கும்போது, பெரம்பூரில் மதம், திருச்சி கிழக்கில் சாதி-மதம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு போட்டியிட்ட ஜோசப் விஜயால் எப்படி சாதி மதத்தை ஒழிக்க முடியும்? திமுக செய்த விளம்பர அரசியலைத்தான் இவர்களும் செய்கிறார்கள். மக்கள் பணத்தை வீணடிக்க மாட்டோம் என்று கூறிவிட்டு, பேருந்து நிலையங்களில் விளம்பரப் பதாகைகளை வைத்துள்ளார்கள்.
தினமும் ரீல்ஸ் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் 6 மாதங்கள் கழித்து யாரும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஓட்டு போடுவோம் என்று சொல்ல மாட்டார்கள்” எனக் காரசாரமாகக் குறிப்பிட்டார். தமிழகத்தில் தற்போது தினமும் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதாகக் குற்றம்சாட்டிய சீமான், அதற்குள் பெரும் தொகையை மின்கட்டணமாக வசூலிப்பதாக சாடினார்.
மேலும், “மீன்பிடிக்கச் சென்று 850 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர்களின் குடும்பங்களுக்கு நிதியோ, அரசுப் பணியோ வழங்கப்பட்டதா? அப்படி இருக்கும்போது கரூர் அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கியதை நான் கண்டிப்பாக எதிர்ப்பேன். லஞ்சம் கேட்டுக் கொடுக்காதீர்கள் எனக் கூறுபவரால், லஞ்சம் வாங்கினால் டிஸ்மிஸ் செய்வேன் என்று தைரியமாகச் சொல்ல முடியவில்லை.
அதேபோல, ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் தர முன்வரும் மத்திய அரசு, நதிநீரைப் பெற்றுத்தர ஏன் முன்வரவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினார். தனது உரையின் நிறைவாக, வரவிருக்கும் தேர்தல் குறித்துப் பேசிய சீமான், “தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள் என்றுதான் நான் வெறியோடு காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று ஆவேசமாக முழங்கினார். அரசியல் சூழல் குறித்துப் பேசப்பட்ட இந்த நிகழ்வு, அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
