• காலை எழுந்தவுடன் சூடான ஒரு கப் காபி குடிப்பது பலருக்கும் அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத பழக்கமாக மாறியுள்ளது. புத்துணர்ச்சிக்காகக் குடிக்கப்படும் இந்த காபி, நமது உடலின் மிக முக்கியமான உறுப்பான கல்லீரலுக்கு  அளப்பரிய நன்மைகளைத் தருகிறது என்று குடலியல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர்கள்   தெரிவிக்கின்றனர். தினமும் காபி அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்தில் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைப் பல்வேறு மருத்துவ ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

முதலாவதாக, காபி குடிப்பதால் கல்லீரலில் தேங்கும் தேவையற்ற கொழுப்பின் அளவு குறைகிறது. இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு முறையால் பலருக்கும் ஏற்படும் ‘ஃபேட்டி லிவர்’   எனப்படும் கல்லீரல் கொழுப்புப் பிரச்சனையைத் தடுக்க காபி பெரிதும் உதவுகிறது. இரண்டாவதாக, கல்லீரலில் வீக்கம்   ஏற்படுவதைத் தடுத்து, திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கும் எதிர்ப்புச் சக்தியை காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வழங்குகின்றன.

மூன்றாவதாக, கல்லீரல் சுருக்கம்  மற்றும் தழும்பு திசுக்கள் உருவாக்கம்   போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயத்தை காபி பெருமளவில் குறைக்கிறது. காபியில் உள்ள காஃபேஸ்டால்  , கஹ்வோல்   மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்ற இயற்கை வேதிப்பொருள்கள் கல்லீரல் செல்களைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. நான்காவதாக, கல்லீரல் புற்றுநோய்  வருவதற்கான வாய்ப்பையும் தினமும் சீரான அளவில் காபி அருந்துபவர்களுக்குக் குறைவாகவே உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

இருப்பினும், இந்த நன்மைகளைப் பெற காபியில் அதிக அளவில் சர்க்கரை, அதிகக் கொழுப்புள்ள பால் அல்லது செயற்கைச் சுவையூட்டிகளைச் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. அளவோடு காபி அருந்தி, ஆரோக்கியமான உணவு முறையையும் பின்பற்றி வந்தால் கல்லீரலை எந்தவித பாதிப்பும் இன்றி நீண்ட காலம் ஆரோக்கியமாகப் பாதுகாக்க முடியும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாகும்.