உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் குடும்பத்தை உலுக்கிய கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில், மனைவி தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரவு நேரத்தில் கணவருக்கு போதை கலந்த குளிர்பானம் கொடுத்து மயக்கமடையச் செய்த பின்னர், சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பெண் வீட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில், பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

லோஹர்புரி கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான உமாசங்கர் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்ட மம்தாவுடன் 20 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவம் நடந்த இரவு மம்தா குளிர்பானம் வாங்கி வந்து முதலில் தானே குடித்ததாகவும், பின்னர் குழந்தைகளுக்கும் கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். அதன் பின்னர் கணவருக்கு அந்த பானத்தை கொடுத்து, இருவரும் மாடியில் இருந்ததாக குழந்தைகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் சத்தம் கேட்டு மாடிக்குச் சென்ற குழந்தைகள், தாய் அங்கு இல்லாததையும், தந்தை இறந்த  நிலையில் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது கழுத்தில் சேலை சுற்றப்பட்டிருந்ததை பார்த்த அவர்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் பதுங்கியிருந்த மம்தாவை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கடந்த ஆண்டு உமாசங்கர் வேலைக்காக குஜராத்திற்கு சென்றபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை கவனிக்க மம்தாவும் அங்கு சென்றதாக தெரியவந்தது. அப்போது பவேஷ் என்ற இளைஞருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பவேஷை நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன்பிறகும் குடும்பத்துடன் கிராமத்தில் வசித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கள்ளக்காதலருடன் வாழும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மம்தா குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், வழக்கின் அனைத்து அம்சங்களையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.