மிர்சாபூர் மாவட்டத்தின் ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த சோகச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின் முன்பு துணி துவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தாய், அருகில் ஒரு மாதமே ஆன தனது பெண் குழந்தை முனிதாவை படுக்கவைத்திருந்தார். அந்த நேரத்தில் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் திடீரென குழந்தையை நோக்கி பாய்ந்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் குழந்தையின் தலை மற்றும் முகப்பகுதியை தெருநாய் கடுமையாகக் கடித்து குதறியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து நாயை விரட்டியடித்தனர். ஆனால் அதற்குள் குழந்தை பலத்த காயமடைந்திருந்ததால், குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், கிராம மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு குடும்பத்தினர் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், குழந்தையின் உடலுக்கு குடும்பத்தினர் உறவினர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்குகளை நடத்தினர். தெருநாய்களின் தாக்குதலால் நிகழ்ந்த இந்த உயிரிழப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.