உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும், பொதுமக்களையும் ஒரு நிமிடம் உறைந்துபோகச் செய்துள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்று இறந்துவிட்டதாகக் கூறி சடலமாக வீட்டுக்கு அனுப்பிய 65 வயது மூதாட்டி, அவரது இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு செல்லப்பட்ட வழியில் திடீரென மூச்சுவிட்டு உயிருடன் மீண்டுள்ளார். ஷீலா தேவி என்ற அந்த மூதாட்டிக்கு இப்போது ஆக்ராவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்துக் குடும்பத்தினர் கூறுகையில், “மருத்துவமனையில் மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறி எங்களுக்கு உடலைக் கொடுத்துவிட்டனர். நாங்களும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் இறுதிச் சடங்கு செய்வதற்காக ஆக்ராவுக்கு உடலை எடுத்துச் சென்றோம். அப்போது வழியில் திடீரென அவரது உடலில் அசைவு தெரிந்தது. உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றால், அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது” என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
https://x.com/thetatvaindia/status/2083097833385718049?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2083097833385718049%7Ctwgr%5E92522699ffed260dffc4c98071dc36b22a1c64f8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fviral%2Fmiracle-or-medical-lapse-bareilly-woman-declared-dead-by-hospital-revives-while-being-taken-for-last-rites-watch
ஒரு மனிதர் இறந்துவிட்டாரா இல்லையா என்பதை உறுதி செய்வதில் மருத்துவர்கள் எந்தளவுக்கு அலட்சியமாக இருக்கிறார்கள் என்ற பெரும் கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கும், உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் முன்பாக முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்ற விதியை இந்த மருத்துவமனை மீறியுள்ளதா என்ற கோணத்தில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடி வரும் ஷீலா தேவியின் உயிர் பிழைத்ததை பலரும் ‘அதிசயம்’ என்று கூறினாலும், மறுபுறம் இது மருத்துவத்துறையின் மன்னிக்க முடியாத ‘பேரதிர்ச்சி அலட்சியம்’ என்றே குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன. மருத்துவமனைகளின் இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையால் அப்பாவி மக்கள் படும் இன்னல்களை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
