ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்  சென்னப்பன். இவரது மகள் வினோதினி (24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் தனிஷ் என்ற மகன் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் அருகில் மகனுடன் தனித்து வசித்து வந்தார். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நவீன் என்கிற நவநீதிகிருஷ்ணன் (26) என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறில், வினோதினி மீது காதலனே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்ற கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  சூர்யா என்பவரை வினோதினி திருமணம் செய்து இருந்த நிலையில் instagram மூலமாக பலருடன் பழகி வந்துள்ளார். இதன் உச்சகட்டமாக நவநீதகிருஷ்ணனுடன் கள்ளக்காதல் உறவில் இருக்கவே கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் அதிகரித்து பின்னர் இருவரும் பிரிந்தனர். இதற்கிடையில் வினோதினி தன் கள்ளக்காதலன் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரிடம் இருந்து விலகிய நிலையில் நவநீதகிருஷ்ணன் வேறு ஒருவனுடன் அவள் பேசுவதாக நினைத்துள்ளான். மேலும் இதனால் ஏற்பட்ட சந்தேகத்தில்தான் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவில் வினோதினியின் வீட்டுக்குள் நுழைந்த நவநீதிகிருஷ்ணன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை வினோதினி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீ பற்றி எரிந்ததால் வலியால் அலறிய வினோதினி, தப்பிக்க முயன்ற காதலனை இறுகப் பிடித்துக் கொண்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரைப் பார்த்ததும் நவநீதிகிருஷ்ணன் தீக்காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். படுகாயமடைந்த வினோதினியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வினோதினியிடம், ஈரோடு கூடுதல் மகளிர் கோர்ட்டு நீதிபதி நேரில் மரண வாக்குமூலம் பதிவு செய்தார். அதில், நவநீதிகிருஷ்ணன்தான் தன் மீது தீ வைத்ததாக அவர் தெளிவாகத் தெரிவித்தார். இதனிடையே, சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

தலைமறைவான காதலனைத் தேடியபோது, அவனது இரு கைகள் மற்றும் முகத்தில் தீக்காயம் இருப்பது தெரியவந்தது.  ஒரு தனியார் மருத்துவமனையில் அவன் பதுங்கி சிகிச்சை பெற்று வருவது போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் உடனடியாக அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கப் போவதாகவும், தற்போது அவன் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் காதலனால் இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.