நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக வைத்து போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தன.
போராட்டம் நாடு முழுவதும் காட்டுத்தீ போலப் பரவி, மத்திய அரசுக்குக் கடுமையான அரசியல் அழுத்தத்தைக் கொடுத்த சூழலில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பிற்குப் பணிந்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமருக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில், “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வளர்ச்சித்திற்காகவும், நாட்டின் கல்விச் சீர்திருத்தத்திற்காகவும் நான் கடந்த 40 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து உழைத்துள்ளேன்” என்று மிக உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படும் அதே வேளையில், மத்திய கல்வி அமைச்சரின் இந்தத் திடீர் ராஜினாமா தேசிய அரசியல் வட்டாரத்திலும், தலைநகர் டெல்லியிலும் மிகப்பெரிய பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
