உலகைக் காப்பதற்காகச் சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே பிரதோஷ நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமையுடன் இணைந்து வரும் நவம்பர் 3-ஆம் தேதி ‘சோமவார பிரதோஷம்’ மிகவும் பலன் தரக்கூடிய ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் எளிய பரிகார வழிபாடுகள், மனிதர்களின் தீராத கஷ்டங்களையும் போக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.
பிரதோஷ நாளன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, பூஜை அறையில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்க வேண்டும். அப்போது கையில் சிறிதளவு பச்சரிசியை ஏந்தி இறைவனை மனதாரப் பிரார்த்தித்து, அதனைப் பறவைகளுக்கு உணவாக அளிப்பது சிவபெருமானின் அருளோடு சந்திர பகவானின் யோகத்தையும் பெற்றுத் தரும்.மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான பிரதோஷ வேளையில், பெரிய தாம்பாளத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி, அதன் நடுவில் வெற்றிலையின் மீது மஞ்சள் பிள்ளையாரையும் மஞ்சள் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
பின்னர், அதனைச் சுற்றி 12 நெல்லிக்கனிகளில் தீபமேற்றி, “ஓம் நமசிவாய”, “ஓம் சிவாய நம”, “ஓம் சிவ சிவ ஓம்” ஆகிய மந்திரங்களை 54 முறை உச்சரித்து, வில்வ இலைகள் அல்லது மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.வழிபாடு முடிந்ததும் கற்பூர ஆரத்தி காட்டி விரதத்தை நிறைவு செய்யலாம்.
பூஜையில் பயன்படுத்திய மஞ்சள் பிள்ளையாரையும் சிவலிங்கத்தையும் இரவு முழுவதும் அப்படியே வைத்து, மறுநாள் காலையில் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்து, நெற்றியில் திலகமாக இட்டுக் கொள்வது குடும்பத்திற்குப் பாதுகாப்பையும் செல்வச் செழிப்பையும் தரும்.
