சென்னை மணலி பகுதியில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்த இளம்பெண் ஒருவருக்கும், அதனை விநியோகம் செய்ய வந்த ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், அண்மையில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவர் தனது முகவரியைத் தவறாகக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. தற்காலத்தில் கூகுள் மேப் வழிகாட்டுதலை நம்பியே டெலிவரி ஊழியர்கள் பயணிக்கும் நிலையில், தவறான முகவரியால் அந்த வரைபடமும் ஊழியரைத் தவறான இடத்திற்கே வழிநடத்தியுள்ளது. இதனால் உணவைக் கொண்டு சேர்ப்பதில் கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து உணவை எடுத்து வந்த டெலிவரி ஊழியரான கிஷோர் என்பவரிடம், அந்த இளம்பெண் தாமதம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே லேசான வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அந்தப் பெண்அவரை மிகவும் அநாகரிகமான வார்த்தைகளால் வசைபாடத் தொடங்கினார். காது கொடுத்துக் கேட்க முடியாத அளவிற்கு அர்ச்சனை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த ஊழியரின் குடும்பத்தாரையும் இழிவாகப் பேசி, தன் கோபத்தைத் தீர்த்துக் கொண்டுள்ளார். மேலும், அவரே தவறு செய்துவிட்டு, காவல் துறைக்கும் தொலைபேசி மூலம் புகார் அளிக்க முயன்ற காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டன.
View this post on Instagram
இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவின. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும், உழைக்கும் வர்க்கத்து ஊழியரை இவ்வளவு கேவலமாகப் பேசிய அந்தப் பெண்ணை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து, “வெளுத்து வாங்க”த் தொடங்கினர்.
நெட்டிசன்களின் கடுமையான எதிர்ப்பையும், கண்டனங்களையும் எதிர்கொள்ள முடியாத அந்த இளம்பெண், தற்போது தனது தவறை உணர்ந்து இறங்கி வந்துள்ளார். தம்மால் பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர் கிஷோரைத் தேடிக் கண்டுபிடித்த அவர், ஒட்டுமொத்தப் பொதுவெளியிலும் தனது செயலுக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், “என்னுடைய இந்தச் செயல் மற்ற டெலிவரி ஊழியர்களின் மனதைக் காயப்படுத்தியிருந்தால் என்னைத் தயவுசெய்து மன்னியுங்கள். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த வீடியோவை இனி யாரும் பகிர வேண்டாம். நாங்கள் இனிமேல் நண்பர்கள், எங்களுக்குள் இனி எந்தச் சண்டையும் இல்லை, நாம ப்ரெண்ட்ஸ் சரியா?” என்று கிஷோரிடம் சமாதானம் பேசியுள்ளார். இத்துடன் இந்த விவகாரம் ஒரு சுமுக முடிவுக்கு வந்துள்ளது.
