ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் நர்ஸ் ஒருவர், 65 வயது முதிய மருத்துவர் ஒருவரைத் தனது காதல் வலையில் வீழ்த்தி, பல ஆண்டுகளாகக் கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்த பகீர் சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அந்த மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்த கமலா என்ற பெண்ணின் மீதே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மருத்துவமனையின் மேல்தளத்தில் உள்ள மருத்துவரின் தனிப்பட்ட அறைக்குத் தொடர்ந்து சென்று பழகிய அந்த நர்ஸ், ஒரு கட்டத்தில் மருத்துவரின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களைத் தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்து கொண்டுள்ளாள்.
இந்தப் புகைப்படங்களைக் காட்டியே அந்த மருத்துவரின் பிளாக்மெயில் வாழ்க்கையைத் தொடங்கிய அந்தப் பெண், பின்னர் தன் போக்கை மாற்றி மிகக் கடுமையான மிரட்டல்களில் ஈடுபடத் தொடங்கினார். தான் விரும்பும் போதெல்லாம் பணம் தராவிட்டால் போலி பலாத்கார வழக்குகளில் மாட்டிவிட்டு உங்களது ஒட்டுமொத்த நற்பெயரையும் சமூகத்தில் கெடுத்துவிடுவேன் என்றும், அந்தரங்கப் படங்களை இணையத்தில் வைரலாக்கி விடுவேன் என்றும் மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.
தனது மருத்துவமனை மற்றும் சமூகத்தின் மீதான கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயத்தின் காரணமாக அந்த முதியவரும் பல ஆண்டுகளாக அந்தப் பெண் கேட்ட போதெல்லாம் பணத்தை அள்ளி அள்ளி வழங்கி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மருத்துவர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், அந்தப் பெண் நர்ஸ் தன் கைவரிசையைக் காட்டி இதுவரை சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைத் தன்னிடம் இருந்து ஏமாற்றிப் பறித்துள்ளதாகத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இதில் மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக மட்டும் சுமார் 35 லட்சம் ரூபாய்க்கு மேல் மாற்றப்பட்டுள்ளதுடன், பல காலி காசோடைகளிலும் மற்றும் முத்திரைத் தாள்களிலும் வலுக்கட்டாயமாகத் தன் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு துன்புறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சாதுவான நர்ஸைக் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
