பொதுவாகப் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பல்லி தொல்லை. வீட்டின் சுவர்கள், சமையலறை மற்றும் வெளிச்சம் உள்ள பகுதிகளில் ஊர்ந்து செல்லும் பல்லிகள், வீட்டை அசுத்தப்படுத்துவதுடன் பலருக்கு அருவருப்பையும் பயத்தையும் ஏற்படுத்துகின்றன. சந்தைகளில் பல்லிகளை விரட்ட பல இரசாயனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும், அவை வீட்டிலிருக்கும் குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளின் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானவை அல்ல.
ஆனால், எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி நமது சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே பல்லிகளை மிக எளிதாக விரட்ட முடியும். பல்லிகளை விரட்டுவதில் வெங்காயம் மற்றும் பூண்டு மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றில் இருக்கும் காரமான நெடி பல்லிகளுக்குச் சிறிதும் பிடிக்காது. எனவே, வெங்காயச் சாறு அல்லது பூண்டுச் சாற்றைத் தண்ணீரில் கலந்து, பல்லிகள் அதிகமாக நடமாடும் இடங்களில் தெளித்து வரலாம்.
அதேபோல், பூண்டுப் பற்கள் அல்லது வெங்காயத் துண்டுகளை வீட்டின் மூலைகள் மற்றும் ஜன்னல் பகுதிகளில் தொங்கவிடுவதன் மூலமும் பல்லிகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியும். இதேபோல், மயிலிறகு மற்றும் முட்டை ஓடுகளும் பல்லிகளை விரட்டப் பெரிதும் பயன்படுகின்றன. மயிலிறகைக் கண்டால் பெரிய பறவை இருப்பதாகக் கருதி பல்லிகள் பயந்து ஓடிவிடும். எனவே, வீட்டின் வரவேற்பறை மற்றும் ஜன்னல்களில் மயிலிறகைச் செருகி வைக்கலாம்.
மேலும், காலி முட்டை ஓடுகளின் வாசனை பல்லிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதால், அவற்றை வீட்டின் மூலைகளில் வைத்து வரும்போது பல்லிகள் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காது. பல்லிகள் மீண்டும் வீட்டிற்குள் வராமல் தடுக்க சில அடிப்படையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதும் அவசியமாகும்.
குறிப்பாக, வீட்டை எப்போதும் சுத்தமாகவும், தேவையில்லாத பூச்சிகள் இல்லாதவாறும் வைத்திருக்க வேண்டும். பல்லிகள் பூச்சிகளை உணவாகக் உட்கொள்ளவே வீட்டிற்குள் வருகின்றன என்பதால், விளக்கு வெளிச்சத்தில் பூச்சிகள் சேர்வதைக் குறைக்க வேண்டும். இரவு நேரங்களில் உணவுக் கழிவுகளைத் திறந்து வைக்காமல் மூடி வைப்பதும், ஜன்னல்களில் வலைகளை அமைப்பதும் பல்லி தொல்லையிலிருந்து நிரந்தர தீர்வை வழங்கும்.
