கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், புதைக்கப்பட்ட தாயின் சடலத்தை அவரது மகன்களே சட்டவிரோதமாக தோண்டி எடுத்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் இருந்து தப்பிக்க ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் இந்த செயலில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினர் நள்ளிரவில் மடக்கிப் பிடித்தனர்.
அதாவது மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருந்ததால், காவல் நிலையத்தில் இயற்கை மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. உடற்கூறாய்வு பரிசோதனைக்குப் பிறகு, காவல்துறையினர் சடலத்தை அவரது மகன் மஞ்சுநாத்திடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, கிராமத்தில் உள்ள அவர்களின் சொந்த விவசாய நிலத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை 18-ஆம் தேதி நள்ளிரவில் மஞ்சுநாத் மற்றும் அவரது மூத்த சகோதரர் வெங்கடேஷா ஆகிய இருவரும், அதிகாரிகளின் எவ்வித அனுமதியும் இன்றி, தங்களது தாயின் சடலத்தை நிலத்திலிருந்து தோண்டி எடுத்தனர். பின்னர், அந்தச் சடலத்தை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தாவணகெரே நகரத்தை நோக்கி ரகசியமாகக் கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது அந்த பகுதியில் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூட்டையுடன் சென்ற இருவரையும் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில், அவர்கள் தோண்டி எடுக்கப்பட்ட தாயின் சடலத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், அதனை உடனடியாக அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்து வரும் காவல்துறை விசாரணையில் இருந்து தப்பிக்கவும், ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்திலுமே இவர்கள் இவ்வாறு சடலத்தைக் கடத்திச் சென்றதாக தலைமைக் காவலர் சாந்தராஜ்குமார் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இரு சகோதரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
