இன்றைய நவீன காலத்தில் பல லட்சம் மற்றும் கோடிகளைச் செலவழித்து ஆடம்பர வீடுகளை வாங்குவது பலரின் கனவாக உள்ளது. ஆனால், அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து வாங்கப்படும் ஆடம்பர வீடுகளின் கட்டுமானத் தரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பிளாட் ஒன்றில் குடியிருப்புப் பகுதிக்குள் திடீரென நீர் குழாய் உடைந்து, வீட்டின் கூரையில் இருந்து நீர் அருவி போல ஆர்ப்பரித்து கொட்டும் அதிர்ச்சி காட்சி பதிவாகியுள்ளது.
இந்த எதிர்பாராத விபத்தால் அந்த பிளாட் முழுவதும் தண்ணீர் தேங்கி, ஏரிக் கரை போல வெள்ளக்காடாக மாறியது. வீட்டில் இருந்த விலையுயர்ந்த மர சாமான்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி கடுமையாக சேதமடைந்தன.
சுவர்களிலும், கூரையிலும் நீர் கசிந்து வீடே நிலைகுலைந்து போனது. ரூ. 2 கோடி கொடுத்து வாங்கிய வீட்டில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததைக் கண்டு அப்பகுதியினரும், அந்த வீட்டின் உரிமையாளரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “கோடிக்கணக்கில் பணம் வாங்கும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் உள் உள்கட்டமைப்பு மற்றும் பிளம்பிங் பணிகளில் எந்தளவுக்கு அலட்சியமாகச் செயல்படுகின்றன என்பதற்கு இதுவே சான்று” எனப் பலரும் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டின் வெளிப்புற அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்டுமான நிறுவனங்கள், தரமான குழாய்கள் மற்றும் சரியான பராமரிப்பு வசதிகளைச் செய்வதில் தவறிவிடுவதாகப் பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
