மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு சோமாட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்து அனுப்பி வைத்த நெகிழ்ச்சியான இணையத்தில் வைரலாகி வருகிறது.

மருத்துவச் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மும்பையிலிருந்து அனுப்பப்பட்ட இந்த அன்பு உதவி, சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது.

“>

இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், சோமாட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர் கையில் பெரிய உணவுப் பொட்டலத்துடன் நிற்பதைக் காண முடிகிறது. அங்குள்ளவர்களிடம் பேசும் அவர், “மும்பையைச் சேர்ந்த அனுஜ் ராவத் என்ற நபர் இந்த உணவிற்கான முழுப் பணத்தையும் செலுத்தி ஆர்டர் செய்துள்ளார்.

டெல்லியில் பசியோடு இருக்கும் போராட்டக்காரர்களுக்கு இதனை விநியோகிக்குமாறு கேட்டுக்கொண்டார்” என்று கூறுகிறார். தங்களுக்கு அறிமுகமே இல்லாத ஒருவரின் இந்த மனிதநேயப் பண்பைக் கண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்து, அவருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

இந்த வீடியோ, குறுகிய காலத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானது. “தொலைதூரத்தில் இருந்தாலும் சக மனிதர்களின் பசியைப் புரிந்து உதவும் இந்த மனப்பான்மையே இந்தியாவின் உண்மையான அடையாளம்” என நெட்டிசன்கள் மும்பை நபரைப் பாராட்டி வருகின்றனர்.

மேலும், ஜந்தர் மந்தர் போன்ற போராட்டக் களங்களுக்கு உணவு அனுப்பும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளை வழங்கி சோமாட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும் இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.