ஆபத்து மற்றும் அவசரக் காலங்களில் நாட்டின் எல்லையைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்கள், பொதுமக்களின் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தங்களின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி தேவதூதர்களாக மாறி வருகிறார்கள். இதற்குச் சான்றாக, நடுரோட்டில் மின்சார கார் சார்ஜ் தீர்ந்துபோய் தவித்துக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு, இந்திய ராணுவ ஜவான் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காரைத் தள்ளிச் சென்று உதவி செய்த நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

அழகு மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த வீடியோக்களைப் பதிவிடும் பிரபல யூடியூபரான தீபிகா சர்மா என்பவர் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “காலையில் நான் வீட்டில் இருந்து புறப்படும் போது எனது மின்சார காரில் 60 சதவீத சார்ஜ் இருந்தது. ஆனால், திரும்பி வரும் வழியில் ஏற்பட்ட சில தவறான கணக்கீடுகள் காரணமாகக் காரின் சார்ஜ் வேகமாக குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் காரின் ஏசியைக் கூட அணைத்துவிட்டேன். ஆனாலும் பலனளிக்கவில்லை” என்று தான் சந்தித்த இக்கட்டான சூழலை விவரித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Deepika Sharma (@deepika_sharma_sidana)

காரில் சார்ஜ் 10 சதவீதமாகக் குறைந்ததும், அருகில் இருக்கும் சார்ஜிங் மையத்தைத் தேடி அவர் காரை ஓட்டியுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மையத்தை நெருங்குவதற்குள் சார்ஜ் வெறும் 2 சதவீதமாகக் குறைந்து, பின்னர் முற்றிலும் பூஜ்ஜியமாகி கார் நடுரோட்டிலேயே நின்றுவிட்டது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த தீபிகா சர்மா, அங்கு நின்றிருந்த நரேந்திரா என்ற இந்திய ராணுவ வீரரிடம் அருகில் உள்ள சார்ஜிங் மையத்திற்கு வழி மட்டுமே கேட்டுள்ளார். ஆனால், அந்த ராணுவ வீரரோ வெறும் வழியைக் காட்டுவதோடு நிறுத்தாமல், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காரில் ஏறி அமர்ந்து, காரைச் சார்ஜிங் மையம் வரை தள்ளிச் செல்ல உதவத் தொடங்கினார்.

ராணுவ வீரரின் இந்த மனிதாபிமானச் செயலால் நெகிழ்ந்துபோன தீபிகா, வீடியோ பதிவிடும் போதே உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். “இன்றைய சுயநல உலகில் யாருமே உதவி செய்ய முன்வருவதில்லை. எனது சொந்தத் தவறால் இந்தச் சூழல் ஏற்பட்ட போதும், எனக்கு உதவ இந்திய ராணுவ வீரர் வந்துள்ளார். இந்திய ராணுவத்திற்கு எனது மனமார்ந்த சல்யூட்” என்று பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல், அந்த ராணுவ வீரர் கார் சார்ஜ் ஆகும் வரை அரை மணி நேரம் அங்கேயே காத்திருந்து, தீபிகா பாதுகாப்பாக முதன்மைச் சாலைக்குத் திரும்புவதை உறுதி செய்த பிறகே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த வீடியோவைக் கண்ட லட்சக்கணக்கான நெட்டிசன்கள், “நிஜமான சூப்பர் ஹீரோக்கள் ராணுவ சீருடையில் தான் இருக்கிறார்கள்” என அந்த ஜவானைப் பாராட்டி வருகின்றனர்.