சமூக வலைத்தளங்களில் பைக்குகளில் செல்லும் நாய்கள், ஆட்டோ மேல் அமர்ந்து உலா வரும் நாய்கள் எனப் பல விசித்திர வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது இணையத்தில் உலா வரும் வீடியோ ஒன்றில், செங்கல் சுவரில் உள்ள ஒரு சிறிய ஓட்டைக்குள் தனது தலையை நுழைத்து, வெளியே எடுக்க முடியாமல் மாட்டித் தவிக்கும் ஒரு நாயின் அலப்பறைகள் நெட்டிசன்களை சிரிக்க வைத்துள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், செங்கல் சுவரில் இருந்த ஒரு சிறிய துவாரத்திற்குள் நாய் ஒன்று ஆர்வக்கோளாறில் தனது தலையை நுழைத்துள்ளது. உள்ளே போன தலை, வெளியே வர முடியாமல் கழுத்துப் பகுதியில் பலமாக மாட்டிக்கொண்டது. எவ்வளவு முயன்றும் தலையை வெளியே எடுக்க முடியாமல் போனதால், ஒரு கட்டத்தில் வலியால் அந்த நாய் பலத்த சத்தமிட்டுக் கதறத் தொடங்கியது.

நாயின் அலறல் சத்தத்தைக் கேட்ட அந்தப் பகுதி மக்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட ஒரு நபர், உடனடியாக ஒரு சுத்தியலை எடுத்து வந்தார். நாய்க்கு எவ்வித காயமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர், சுவரில் நாய் மாட்டியிருந்த ஓட்டையைச் சுற்றியுள்ள செங்கற்களை மெல்ல மெல்ல சுத்தியலால் தட்டி உடைக்கத் தொடங்கினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த நாய் பத்திரமாக மீட்கப்பட்டது.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த நெட்டிசன்கள், அந்த நாய்க்கு அன்போடு நக்கலான பெயரிட்டு மீம்களைப் பறக்கவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், “அடுத்த வீட்டுல என்ன நடக்குதுன்னு எட்டிப் பார்க்கப் போய்  வசமாக மாட்டிக்கொண்டார்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, “இவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கிய பிறகும், அந்த நாய்  இன்னும் செம்ம கூலாக போஸ் கொடுக்கிறாரே!” என்று கமெண்ட் செய்துள்ளார். இந்த வேடிக்கையான நாய் மீட்பு வீடியோ தற்போது இணையத்தில் செம்ம ட்ரெண்டாகி வருகிறது.