அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பிரின்ஸ் ஜார்ஜ் கவுண்டியில், ஒட்டுமொத்தப் போலீசாரையும் தலையைப் பிச்சிக்கொள்ள வைக்கும் வகையில் ஒரு வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பூனை தத்தெடுப்பு மையத்தில் இருந்து அழகிய பூனைக்குட்டி ஒன்றைத் திருடிய நபர், அடுத்த சில நிமிடங்களில் பக்கத்தில் இருந்த வங்கியைத் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்ற விபரீத சம்பவம் தற்போது உலகளவில் செம வைரலாகி வருகிறது.
விவரங்கள் படி, அங்குள்ள பால்டிமோர் அவென்யூ பகுதியில் செயல்பட்டு வரும் ‘பெட் சப்ளைஸ் பிளஸ்’ என்ற விலங்கு வளர்ப்பு கடைக்குள், வெளிர் நிற டி-சர்ட் மற்றும் கறுப்பு நிறத் தொப்பி அணிந்த நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின்படி, அந்த நபர் யாருக்கும் தெரியாமல் பூனைகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டைத் திறந்து, ‘மக்னோலியா’ என்ற 3.5 மாத கியூட்டான டக்ஷிடோ வகை பூனைக்குட்டியைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, அந்த நபர் கடந்த இரண்டு வாரங்களாகத் தினமும் அந்தப் பெட் ஷாப்பிற்கு வந்து, அந்தப் பூனைக்குட்டியை மட்டுமே உற்றுப் பார்த்துச் சென்றதாகக் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பூனையைக் கையில் தூக்கிக்கொண்டு ஓடிய அந்த நபர், நேராக அந்தப் பார்க்கிங் பகுதிக்கு மறுபுறம் இருந்த ‘பிஎன்சி’ (PNC Bank) வங்கி கிளைக்குள் அதிரடியாக நுழைந்து அங்கிருந்தவர்களை அதிரவைத்துள்ளார்.
வங்கிக்குள் சென்ற அந்த நபர், தான் திருடி வந்த பூனைக்குட்டியை அங்கிருந்த ஒரு ஊழியரின் கையில் கொடுத்து “இதை கொஞ்சம் பிடியுங்கள்” என்று கூலாகக் கூறியுள்ளார். அதன் பின்னர், அங்கிருந்த வங்கிப் பெண் ஊழியரிடம் ஒரு மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து, தன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் எடுத்துத் தருமாறு மிரட்டி வங்கிக் கொள்ளையில் இறங்கியுள்ளார்.
பூனை திருடுபோன விபரமறிந்து பெட் ஷாப்பைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்குச் சைரன் சத்தத்துடன் அதிவேகமாகப் போலீஸ் வாகனங்கள் விரைந்து வந்தன. பூனை திருட்டுக்கு இவ்வளவு பெரிய போலீஸ் படையே வருகிறதே என்று அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்ட நிலையில், போலீசார் நேராக வங்கிக்குள் நுழைந்து அந்த விசித்திரக் கொள்ளையனைப் பணத்தை எடுப்பதற்குள் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
இந்த விசித்திரக் கொள்ளை முயற்சியால் பதற்றமடைந்த வங்கி மேலாளர், மீட்கப்பட்ட பூனைக்குட்டியைத் தனது அறையில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளார். எந்தக் காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்ட ‘மக்னோலியா’ பூனைக்குட்டி, மீண்டும் தத்தெடுப்பு மையத்திற்கே கொண்டு செல்லப்பட்டதாகவும், இச்சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
