பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் தரைக்கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வந்த முகமது ஜம்ஷித் என்ற வாலிபர், தான் ஆசையாய் சேர்ந்த ‘கனவு வேலையை’ ராஜினாமா செய்துள்ளார்.

பணியின் போது தவறுதலாக டை அணிய மறந்துவிட்டதற்காக, நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு அளித்த அவமதிப்பான தண்டனையே இதற்குக் காரணம் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளார்.

“>

விமான நிலைய முனையத்தில் வழக்கமான ஆய்வின் போது, ஜம்ஷித் டை அணியாததை கவனித்த சப்தர்ஷி முகர்ஜி என்ற மூத்த அதிகாரி அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்ஷித் தனது தவறை ஒப்புக்கொண்டு உடனடியாக மன்னிப்பும் கேட்டுள்ளார். இருப்பினும், கோபமடைந்த அந்த அதிகாரி பெண் மேற்பார்வையாளரை அழைத்து, விதிமுறைகளை மீறியவரை எப்படி உள்ளே அனுமதித்தீர்கள் என்று கடிந்துள்ளார்.

அதன் பின்னர், மேற்பார்வையாளரிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னதோடு நில்லாமல், அவரது காலில் விழுந்து கும்பிடுமாறு ஜம்ஷித்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் ஒரு தொழில்முறை பணியிடத்தில் இது மிகவும் தரம் தாழ்ந்த மற்றும் அவமரியாதையான செயல் என்று கூறி ஜம்ஷித் அதற்கு மறுத்ததால், அவர் உடனடியாக முனையத்தில் இருந்து வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரும் அவமதிப்பை உணர்ந்த ஜம்ஷித், இண்டிகோ நிறுவனத்தின் ஒழுக்கநெறி மற்றும் இணக்கக் குழுவிடம் இது குறித்து முறைப்படி புகார் அளித்தார். நிறுவனம் இந்த புகாரை விசாரித்த போதிலும், சம்பவத்தன்று ஜம்ஷித் அங்கு இருந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் இல்லை என்று கூறி விசாரணையை முடித்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் இந்த தட்டிக்கழிக்கும் முடிவில் அதிருப்தியடைந்த ஜம்ஷித், தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்க விரும்பாமல் வேலையை ராஜினாமா செய்தார். பணியிடத்தில் ஊழியர்களின் கண்ணியமும் மரியாதையும் காக்கப்பட வேண்டும் என்ற விவாதத்தை இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக்கியுள்ளது.