சமூக ஊடகங்களில் நொடிப் பொழுதில் பிரபலமாவதற்காக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆபத்தான சாகச வீடியோக்களை வெளியிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், அதிவேகமாகச் செல்லும் சொகுசு காரில் தொங்கியபடி நடந்து வரும் சாகசக் காட்சி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளிக்கு அருகே தின்பண்டங்கள் விற்பனை செய்து எளிய முறையில் பிழைப்பு நடத்தி வரும் மஞ்சுபென் என்ற அந்த 70 வயது பாட்டி தான் இந்தச் சாகச நாயகி. இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், பாரம்பரிய புடவை உடுத்தி, கண்களில் கறுப்புக் கண்ணாடி அணிந்து கெத்தாகக் காட்சியளிக்கும் மஞ்சுபென் பாட்டி, அதிவேகமாகச் செல்லும் கறுப்பு நிற ஸ்கார்பியோ காரின் கதவைப் பலமாகப் பிடித்துக்கொண்டு, ஒற்றைக் காலை மட்டும் காரின் வெளிப் பாதையில் ஆபத்தான முறையில் பயணிக்கிறார்.

மேலும், ஓடும் காரில் இருந்தவாறே ஒரு பெரிய சினிமா ஸ்டார் போலக் கேமராவைப் பார்த்துக் கையசைத்து அவர் போஸ் கொடுக்கும் காட்சி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், “பாட்டியின் தைரியத்திற்கு வயதே தடையில்லை” என்று ஒரு தரப்பினர் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

 

“>

அதே வேளையில், வெறும் சமூக ஊடகப் புகழுக்காக முதியவர்கள் ஆபத்தான காரியங்களில் ஈடுபடுவது விபரீதமான விபத்துகளுக்கு வழிவகுத்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கவலைகளையும் எச்சரிக்கைகளையும் பதிவு செய்து வருகின்றனர்.