ஹரித்வார்:
பெற்ற பிள்ளையின் உடலுக்குக் கொள்ளி வைப்பதை விட ஒரு தாய்க்குப் பெரிய கொடுமை இந்த உலகத்தில் வேறு எதுவுமே இருக்க முடியாது. அந்தப் பேரிழப்பில் தவித்து, தன் மகனின் அஸ்தியோடு கங்கை நதிக்கரைக்கு வந்த ஒரு ஏழைத் தாய்க்கு, அங்கே காத்திருந்த மனித மிருகங்கள் கொடுத்த வேதனை மரணத்தை விடக் கொடியது!
அடுத்தடுத்து விழுந்த இடி… நிலைகுலைந்த தாய்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அந்த ஏழைத்தாயின் வாழ்க்கை சோகக் கதைகளால் நிறைந்தது. சில நாட்களுக்கு முன்புதான் தன் கணவனை இழந்து கதறித் துடித்தார். அந்த சோகம் மாறுவதற்குள், விதியின் கொடூரக் கரங்கள் அவரது வாலிப மகனையும் பறித்துக்கொண்டது.
கணவனையும் இழந்து, கண்முன்னே வளர்ந்து நின்ற வாலிப மகனையும் பறிகொடுத்து, ஒட்டுமொத்த உலகமே இருண்டுபோன நிலையில், மகனின் அஸ்தி அடங்கிய கலசத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ஹரித்வாருக்கு ஓடிவந்தார் அந்தத் தாய். தன் மகனின் ஆன்மாவது கங்கையில் கரைந்து சாந்தியடையட்டும் என்ற நம்பிக்கையோடு அவர் வந்திருந்தார்.
”பணம் இல்லையா?” அஸ்தியைக் கரைக்க மறுத்த கும்பல்!
ஆனால், கங்கைக் கரையில் அவருக்காகக் காத்திருந்தது மனிதாபிமானமற்ற ஒரு கும்பல். ராஜஸ்தான் மக்களின் அஸ்தி விசர்ஜன உரிமையைக் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் ‘கோபால் தும்படிவால்’ என்ற கும்பலின் ஆட்கள், அந்தத் தாயைச் சூழ்ந்துகொண்டனர்.
மகன் மறைந்த துக்கத்தில் அழுதுகொண்டிருந்த அந்தத் தாயிடம், அஸ்தியைக் கரைக்க ஏழாயிரம் ரூபாய் பணம் கேட்டிருக்கிறார்கள். அத்தனை பெரிய தொகைக்கு அந்த ஏழைத்தாய் எங்கே போவார்?
தன் கையில் இருந்த சொற்பப் பணத்தைக் காட்டி, “ஐயா… என்கிட்ட இவ்வளவுதான் இருக்கு, என் மகனோட அஸ்தியைக் கரைக்கக் கொஞ்சம் வழிவிடுங்க…” என்று கையில் அஸ்திக் கலசத்தை ஏந்தியபடி, அந்தத் தாதாக்களின் காலில் விழுந்து கதறிக் கெஞ்சினார்.
கல்நெஞ்சக்காரர்களின் அட்டூழியம்… வேடிக்கை பார்த்த நிர்வாகம்!
பெற்ற மகனை இழந்து தவிக்கும் ஒரு தாயின் கண்ணீரோ, கதறலோ அந்தப் பணப் பேய்களின் மனதை உருக வைக்கவில்லை. ஒரு நாளைக்கு பத்து முதல் பன்னிரண்டு லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டையாடும் இந்தக் கும்பலுக்கு, ஏழைத் தாயின் கண்ணீர் வெறும் துச்சமாகப் போனது. பணம் தராமல் அஸ்தியைக் கரைக்க முடியாது என்று கறாராக மறுத்துவிட்டனர்.
ஹரித்வாரில் இந்தக் கும்பலின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், இவர்களைக் கண்டு உள்ளூர் அதிகாரிகளே அஞ்சி நடுங்குகிறார்கள். இதனால் தான், ஒரு தாய் நடுரோட்டில் அஸ்தியோடு கதறி அழுதபோதும் எவரும் தட்டிக் கேட்க வரவில்லை!
वीडियो में जो व्यक्ति दिख रहा है ये हरिद्वार में राजस्थानियों को मोक्ष दिलाने वाले ठेकेदार गोपाल तुम्बडीवाल के भाडे के आदमी हैं,
हरिद्वार में इनका ऐसा खोफ है वहां कोई भी 6-7 हजार से कम में अस्थि विसर्जन नहीं कर सकता,
इनको कोई मतलब नहीं किसी का बाप मरा हो, किसी का पति चाहे किसी… pic.twitter.com/pUhveDJru3
— Pappu Ram Mundru Sikar (@PRMundru) July 14, 2026
”பெற்ற பிள்ளையை இழந்து தவிக்கும் தாயிடம், அவனது சாம்பலைக் கரைப்பதற்குக் கூட காசு கேட்டு மிரட்டுவதை விடக் கொடூரமான நரகம் வேறு எங்காவது இருக்க முடியுமா?” என்று இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொரு நெட்டிசனும் கண்ணீரோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பணத்திற்காக மனிதாபிமானத்தை அடகு வைத்த இந்தக் கும்பலின் கொடூர முகம், இப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி, ஒட்டுமொத்த நாட்டை உலுக்கி எடுத்து வருகிறது!
