இன்றைய டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகளின் அவசரக் கால நடைமுறைகள், ஒரு ஏழைக் குடும்பத்தின் உயிரைக் குடிக்கும் அளவிற்கு எவ்வளவு கொடூரமானதாக மாறும் என்பதற்குச் சான்றாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பவ்யா லக்ரா என்ற பழங்குடியினப் பெண், டிபி நோயால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது மாமனார் ரத்தன் லக்ராவின் சிகிச்சைக்காக, அவரது பென்ஷன் கணக்கில் இருந்த வெறும் ₹8,000 பணத்தை எடுக்க முடியாமல் பல மாதங்களாக ஜார்க்கண்ட பகுதியில் உள்ள வங்கியில் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
கணக்கு முடக்கப்பட்டதால் ‘இ-கேஒய்சி’ செய்ய வேண்டும் என்று கூறி, அங்கிருந்த ஊழியர்கள் அந்தப் பெண்ணை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மாமனாரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் காசு இல்லாததால், ஆட்டோவில் அவரை நேராக வங்கிளுக்கே கூட்டி வந்து மேனேஜரிடம் கெஞ்சியுள்ளார் அந்தப் பெண்.
ஆனால், “சார் மீட்டிங்கில் இருக்கிறார், சத்தம் போடாதே” என்று ஊழியர்கள் விரட்டியடித்துள்ளனர். இறுதியில், உரிய நேரத்தில் சிகிச்சைக்கான பணம் கிடைக்காமல் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், முதியவரின் சடலத்தை வங்கியின் கிளை வாசலில் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பரவியதை அடுத்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
