ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நாம் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள் வருவதும், அதைத் திருப்பி அனுப்பிய பிறகு பணம் திரும்பக் கிடைக்காமல் இழுத்தடிப்பதும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயமாகும். இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த நுகர்வோர் நீதிமன்றம் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானுக்கு அதிரடியாக அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரான அனிமா என்பவர், கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் அமேசான் தளத்தில் ₹1,945 மதிப்பிலான கருப்பு நிற பிராண்டட் காலணி  ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால், அவருக்கு விளம்பரத்தில் காட்டியதற்கு மாறாக வெள்ளை நிற அடிப்பாகம் கொண்ட வேறு ஒரு காலணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவர், மறுநாளே அந்தப் பொருளைத் திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால், திருப்பி அனுப்பிய பொருள் தங்களுக்கு வந்து சேரவில்லை எனக் கூறி அமேசான் தரப்பு ரீஃபண்ட் வழங்க மறுத்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அனிமா, தனக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கும் பண இழப்பிற்கும் நீதி கேட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ரவி சுஷா மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய அமர்வு, அமேசான் நிறுவனத்திற்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது தரப்பு நியாயத்தை நிரூபிக்க தவறிவிட்டதாகக் குறிப்பிட்டது. இதனால், வாடிக்கையாளரின் புகாரில் உண்மை இருப்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், காலணிக்கான தொகையான ₹1,945-ஐ வாடிக்கையாளருக்கு அமேசான் திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அத்துடன், அமேசான் நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ₹8,000 இழப்பீடும், வழக்குச் செலவுக்காக ₹4,000-ம் என மொத்தம் ₹12,000 தொகையையும் சேர்த்து 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் நிறுவனங்கள் முறையான ஆதாரங்கள் இல்லாமல் நுகர்வோரின் ரீஃபண்ட் உரிமையைப் பறிக்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது.