உத்தரப்பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோனாலி பகுதியில், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் நேபாளத்திற்குள் நுழைய முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்டான் பிரவுன் என்ற நபர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் இவரைத் தடுத்து நிறுத்தி விசாரிக்க முயன்றபோது, அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். எனினும், பாதுகாப்புப் படையினர் அவரைத் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் கடவுச்சீட்டு, விசா போன்ற எந்தவொரு முறையான அடையாள ஆவணங்களும் கண்டெடுக்கப்படவில்லை.

“>

அதோடு விசாரணையின்போது, தான் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை மற்றும் சிறப்புப் படை வீரர் என்று அவர் தெரிவித்துள்ளார். விசாரணையில் ஜோர்டான் பிரவுன் அளித்த வாக்குமூலத்தின்படி, தாய்லாந்திற்குச் சுற்றுலா விசா மூலம் சென்றபோது அங்கு தனது கடவுச்சீட்டைத் தொலைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கும், அங்கிருந்து மீண்டும் கடல் மார்க்கமாக கடந்த 2025 நவம்பர் மாதத்தில் இந்தியாவிற்கும் வந்து சேர்ந்துள்ளார். அதன் பிறகு கோவாவில் வசித்து வந்த அவர், பெங்களூரு வழியாக நேபாளத்திற்குச் செல்ல முயன்றபோது எல்லையில் மாட்டிக்கொண்டார்.

இந்நிலையில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தருவதால் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையினர் அவரது பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது காவல் நிலையத்தில் வெளிநாட்டினர் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.