மத்திய கிழக்கு நாடான யேமனில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி சூழல் முடிவுக்கு வந்து, மீண்டும் போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. யேமனின் தலைநகரான சனாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி விடுத்துள்ள அறிக்கையில், சனா சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து சவுதி அரேபியப் படைகள் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த திடீர் தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து அமைதி முயற்சிகளும் தற்பொழுது முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
யேமன் நாட்டின் அதிகாரப்பூர்வ அரசுக்கு ஆதரவாகச் சவுதி அரேபியா மற்றும் இதர அரபு நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், தங்களின் தலைநகர் மீதான இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஹூதி அமைப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது யேமனின் தலைநகர் சனா கிளர்ச்சியாளர்களின் பிடியிலும், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அதிகாரப்பூர்வ அரசு தெற்கு கடற்கரைப் பகுதியான ஏடன் நகரிலிருந்தும் செயல்பட்டு வருகிறது. சவுதி அரேபியாவின் இந்த தன்னிச்சையான தாக்குதலால், அரபு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது சர்வதேச சமூகத்திடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
