கொளத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் முதலமைச்சர் விஜய் பேசிய “கொத்து பரோட்டா” என்ற வார்த்தைக்கு தி.மு.க முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது செய்தியாளர்கள் சந்திப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் இவ்வாறு கீழ்த்தரமாகப் பேசியிருக்கக் கூடாது என்றும், இதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாகவும் விரிவாகவும் பதில் சொல்லியிருப்பதாகவும் ஆர்.எஸ்.பாரதி சுட்டிக்காட்டியுள்ளார்.

​மேலும் அ.தி.மு.க-விலிருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விவகாரத்தை ஆர்.எஸ்.பாரதி கடுமையாக வம்புக்கு இழுத்துப் பேசியுள்ளார். “கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகிய இரண்டு பேரும் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்றவர்கள், நாங்கள் சாப்பிட்டுப் போட்ட இரண்டு எச்சில் இலைகளைத்தான் இன்றைக்குத் தமிழக வெற்றிக் கழகம் சேர்த்துக் கொண்டுள்ளது என்று அ.தி.மு.க-வினரே கமெண்ட் அடிக்கிறார்கள்” என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

இது போன்ற எச்சில் இலைகளை வைத்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் விழா நடத்துவதாகவும், அவர் தொடர்ந்து இப்படிப் பேசினால் நாங்களும் அதே பாணியில் பேச வேண்டிய நிலைக்கு வருவோம் என்றும் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.