இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, விம்பிள்டன் 2026 டென்னிஸ் இறுதிப் போட்டியைக் காண வந்திருந்தபோது, அவர் அணிந்திருந்த ஆடம்பர உடை மற்றும் அவரது வெகுளித்தனமான பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங் ஆகியோருடன் இணைந்து, ஜானிக் சின்னர் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதிய மாபெரும் இறுதிப் போட்டியைக் காண சூர்யவன்ஷி வந்திருந்தார். அப்போது கறுப்பு நிற சூட், கோடுகளிட்ட டை மற்றும் ஸ்டைலான கண்ணாடி அணிந்து மாஸாக வலம் வந்த அவர், தனது உடைத் தேர்வு குறித்துக் கூறுகையில், “இதற்காக நான் எந்தத் திட்டமும் போடவில்லை; கடைசி நிமிடத்தில் அவசரமாக என்ன கிடைத்ததோ, அதை அபிஷேக் பாயிடம் கூறி ஏற்பாடு செய்து அணிந்து வந்துவிட்டேன்” என தனது வெகுளித்தனமான பாணியில் பதிலளித்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடிவிட்டு விம்பிள்டன் வந்திருந்த சூர்யவன்ஷி, தனக்கு சிறு வயது முதலே டென்னிஸ் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உண்டு என்றும், ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோரின் போட்டிகளைத் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது சிறுவயது ஹீரோக்களில் ஒருவரான யுவராஜ் சிங்கை முதன்முறையாகச் சந்தித்துப் பேசியது வாழ்நாளில் மறக்க முடியாத கற்றல் அனுபவம் என்றும், அவர் தனக்கு வழங்கிய ஆலோசனைகள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.