பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறி 38 நாட்கள் ஆகியும், அண்ணாமலை யாரையும் தரம் தாழ்ந்து திட்டவில்லை என்பதால், “அண்ணாமலை பிஜேபியின் பி-டீமா?” எனச் சில திமுக நண்பர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சந்தேகத்தைக் கிளப்பி வருகின்றனர். “நரேந்திர மோடியைத் திட்டினால்தானே நீங்கள் பிஜேபியில் இருந்து வெளியே வந்தது உண்மை என்று மற்றவர்கள் நம்புவார்கள்” என்று அவர்கள் கேட்டு வரும் நிலையில், இதற்குப் பொள்ளாச்சி மாநாட்டு மேடையில் அண்ணாமலை மிக அதிரடியாகவும் எமோஷனலாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
தான் ஒருபோதும் தரம் தாழ்ந்த அரசியல் செய்யப்போவதில்லை என்று தெளிவுபடுத்திய அண்ணாமலை, “நானும் உங்களைப் போல் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன்; நம்மை வளர்த்த, உப்பைத் தின்று வளர்ந்த ஒரு இயக்கத்தை விட்டு வெளியே வரும்போது, பழிச்சொல் சொல்லிவிட்டு வெளியே வரமாட்டோம்” என்று உருகியுள்ளார். மேலும், தான் ஒரு தேசியவாதி என்பதில் எப்போதும் கர்வம் கொள்வதாகவும், ஒருங்கிணைந்த இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் பொள்ளாச்சி மாநாட்டு மேடையில் அண்ணாமலை கம்பீரமாகப் பேசியுள்ளார்.
