போதைப்பொருள் சப்ளையைக் கட்டுப்படுத்தவும், கஞ்சா விற்பவர்களைக் கைது செய்யவும் காவல்துறை மற்றும் அரசு இருந்தாலும், மன அழுத்தம், பதற்றம், மற்றும் காதல் தோல்வி போன்ற காரணங்களால் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை வாங்க நினைப்பவர்களைக் காவல்துறையால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியாது என்பதைப் பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். இதனைச் சமுதாயமும், ஒவ்வொரு குடும்பங்களும்தான் பேசித் திருத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், குடியால் குடும்பங்கள் அழிவதைத் தடுக்க வீதிகளிலும் கிராமங்களிலும் பெரிய அளவில் விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்பட வேண்டும் என எமோஷனலாகப் பேசினார்.
மேலும், பொள்ளாச்சி மாநாட்டு மேடையில் பேசிய 92 வயது மூத்த மருத்துவர் டாக்டர் ஆழ்வார், ஏழை மக்களுக்காக அன்று வெறும் 2 ரூபாய்க்குத் தொடங்கி, இன்று வரை வெறும் 50 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருவதை அண்ணாமலை பெருமையோடு சுட்டிக்காட்டினார். அதே வேளையில், குடிப் பழக்கத்தால் தந்தையின் கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், தன் சொந்த கல்லீரலின் 90 சதவீதப் பகுதியைத் தந்தைக்குத் தானமாகக் கொடுத்துக் காப்பாற்றிய ஒரு பாசக்கார மகனின் தியாகத்தையும் மேடையில் பகிர்ந்து ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
