மும்பையில் இல்ல ஒரு மருத்துவமனையில், பிறந்த ஒரே மாதத்தில், வெறும் 1.196 கிலோ எடையுடன் இருந்த பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு, பிறப்பிலேயே வாயில் பற்கள் இருந்தது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக, குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்கச் சில மாதங்கள் ஆகும் நிலையில், 2,000 முதல் 3,500 குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே இத்தகைய அரிய நிலை ஏற்படுகிறது. பிறந்த குழந்தைக்கு இருந்த அந்தப் பற்கள் மிகவும் தளர்வாக இருந்ததால், அது குழந்தைக்குத் தாய்ப்பால் குடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியதுடன், தவறுதலாக மூச்சுக்குழாய்க்குள் சென்று ஆபத்தை விளைவிக்கும் அபாயமும் இருந்தது.
இதனால், குழந்தையின் நலன் கருதி அந்தப் பற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். குழந்தை மிகவும் குறைவான எடையுடன் இருந்ததால், அறுவை சிகிச்சை செய்வது ஒரு சவாலான காரியமாக இருந்தது. எனினும், பல் மருத்துவப் பிரிவு மற்றும் குழந்தை நல மருத்துவப் பிரிவு மருத்துவர்கள் இணைந்து, மிகவும் பாதுகாப்பான முறையில் NICU-வில் வைத்து அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.
இந்தச் சிகிச்சையின் மூலம், பற்களால் ஏற்படவிருந்த மூச்சுத் திணறல் மற்றும் நாக்குக் காயங்கள் போன்ற பாதிப்புகள் நீக்கப்பட்டு, குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. குறைந்த எடையுள்ள குழந்தைக்கு இத்தகைய நுட்பமான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்களின் குழுவை மருத்துவமனை நிர்வாகம் பாராட்டியுள்ளது.
