திண்டுக்கல் அருகே சாணார்பட்டியை  சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், பெற்றோரின் கனவுகளையும் வளர்ப்பின் பாசத்தையும் தாண்டி, காதலே வென்றுள்ள ஒரு  சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது எம்.டெக் பட்டதாரியான ராஜபிரியா என்பவருக்கும், வை பாலமுருகன் என்பவருக்குமிடையே மலர்ந்த காதலுக்கு, பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

தங்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறிய தங்களது பட்டதாரி மகள், மதுரையில் உள்ள ஒரு கோவிலில்  காதலனை மணமுடித்துக்கொண்டு, பாதுகாப்பு தேடி சாணார்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததைக் கண்டு அந்தப் பெற்றோர் நிலைகுலைந்து போயினர். காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட பெற்றோர், தாங்கள் ஆசையாய் வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கிய மகள், மாற்றுக்கரம் பற்றி நிற்பதைக் கண்டதும், “எங்களுக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்துவிட்டாயே!” என்று கதறியழுத காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

மகளை எப்படியாவது சமாதானப்படுத்தி தங்களுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அந்தப் பெற்றோர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஒருகட்டத்தில், பெற்றெடுத்த பாசத்தின் உச்சமாக, தந்தை ராமச்சந்திரனும் தாய் செல்வியும் பெற்ற மகள் என்றும் பாராமல் அவளது கால்களில் விழுந்து, தங்களது கௌரவத்தையும் மீறி, “எங்களுடன் வீட்டிற்கு வந்துவிடு” என்று கெஞ்சியழுது அழுது புரண்ட சம்பவம் அங்கிருந்த காவலர்களையும், பொதுமக்களையும் கண்கலங்க வைத்தது.

எனினும், பெற்றோரின் கண்ணீரை விடத் தனது காதல் வாழ்வே முக்கியம் என்பதில் உறுதியாக நின்ற ராஜபிரியா, அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். இறுதியில், சட்டப்படியும், வயது வந்த பெண்ணின் விருப்பப்படியும், போலீசார் ராஜபிரியாவை அவரது கணவர் பாலமுருகனுடன் அனுப்பி வைத்தனர். காலம் காலமாய் வளர்த்த பாசம், சில நிமிடக் காதலுக்கு முன்னால் மண்டியிட்டுத் தோற்றுப் போன ஏமாற்றத்துடன், அந்தப் பெற்றோர் அழுதபடியே தங்களது இல்லம் திரும்பினர்.