மும்பையின் காந்திவிலி பகுதியில் ஒருதலைக் காதலால் மைனர் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி கைது செய்யப்பட்டு அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளன.  அதாவது  காட்டுப் பகுதியில் மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். உடற்கூறாய்வு அறிக்கையில், அந்த மாணவியின் முகத்தில் மட்டும் 16-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதன் பின்னர், தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் சூரஜ் வாக்மரே (22) என்ற டெலிவரி பாயை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான சூரஜ், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு கொலையின் பின்னணி குறித்தும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, 22 வயதான சூரஜ் வாக்மரே அந்த மைனர் மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்ததோடு, தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி மனரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளான். மாணவி மீது கடுமையான சந்தேகம் கொண்ட சூரஜ், அவளது மொபைல் போனில் இருந்த பல ஆண் நண்பர்களின் எண்களை வலுக்கட்டாயமாக நீக்கியதோடு, அவர்களை பிளாக் செய்யுமாறும் மிரட்டியுள்ளான்.

வேறு எந்த ஆண்களிடமும் பேசக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தவன், இதற்கு முன்னதாக மாணவியை மிரட்டுவதற்காகப் தற்கொலை நாடகமும் ஆடியுள்ளான். சம்பவத்தன்று ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்திலும் சந்தேகத்தின் உச்சத்திலும், அந்த மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு சடலத்தைக் காட்டுப் பகுதியில் வீசியுள்ளான். சூரஜின் இத்தகைய அராஜகப் போக்கினால் அந்தப் பகுதிப் பெண்கள் பலரும் ஏற்கனவே அவதிக்குள்ளாகியிருந்ததாகத் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை வழக்குப் பதிவு செய்துள்ள  போலீசார், அவனிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.