உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாடா பகுதியில், குடும்பத் தகராறு மற்றும் சொத்து விவகாரத்தின் காரணமாகப் ஒரு பெண்ணும் அவரது 10 வயது மகனும் சொந்தக் குடும்பத்தினராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீமா என்ற பெண்ணிற்கும், அவரது கணவர் ஜஸ்ராமிற்கும் வீட்டின் நிலுவைத் தொகை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஜஸ்ராம் தனது வீட்டைத் தம்பி ஜெயராமுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு விற்றதில், மீதிப் பணத்தை சீமா தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் ஜஸ்ராம் மற்றும் மைத்துனர் ஜெயராம் ஆகிய இருவரும் சேர்ந்து சீமாவைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். திட்டத்தின்படி, ஜெயராம் தனது அண்ணி சீமா மற்றும் அவரது 10 வயது மகன் அங்குஷ் ஆகியோரை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் சிறுவனை இறக்கிவிட்டு, சீமாவை மட்டும் தனியாக ஒரு விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த கணவர் ஜஸ்ராம் மனைவியின் கால்களைப் பிடித்துக்கொள்ள, ஜெயராம் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
சீமாவைக் கொலை செய்த பிறகு, ஜெயராம் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்து அழுதுகொண்டிருந்த தனது அண்ணன் மகன் அங்குஷை அழைத்துச் சென்றுள்ளான். சிறுவன் வீட்டிற்குச் சென்று உண்மையைச் சொல்லிவிடுவான் என்ற பயத்தில், பெற்ற பிள்ளையைப் போலத் தனது மடியில் வளர்ந்த சிறுவனையும் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். பின்னர், போலீசாரை திசைதிருப்பவும், எல்லைப் பிரச்சனையைக் கிளப்பவும் இரு சடலங்களையும் மாவட்ட எல்லைக்கு அருகே வீசியுள்ளனர்.
மேலும், அடையாளம் தெரியாமல் இருக்க இருவரின் முகத்திலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். ஆனால், பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஜெயராம் சிறுவனுடன் இருக்கும் ஆதாரத்தைக் கண்டுபிடித்து அவனைக் கைது செய்தனர். விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த கணவர் ஜஸ்ராமையும் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சீமாவின் முதிய தந்தை, மகள் பேரன் சடலங்களைப் பார்த்து காவல் நிலையத்திலேயே கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது. தற்போது இரு கொலைகாரர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
