கிரீஸில் இருந்து ஜெர்மனி நோக்கிச் சென்ற விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பயணி ஒருவர் விமானத்திற்கு வெளியே இழுக்கப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. பிரபல Ryanair நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஃப்ளைட் எஃப்ஆர் 1879’ என்ற விமானம், கிரீஸின் மாசிடோனியா விமான நிலையத்திலிருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டுள்ளது. வான்வெளியில் சில ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் இன்ஜினில் திடீரென கடுமையான கோளாறு ஏற்பட்டுள்ளது.
அப்போது இன்ஜினின் ஒரு பெரிய பகுதி உடைந்து, அதிவேகத்தில் வந்து பயணி அமர்ந்திருந்த ஜன்னல் மீது மோதியுள்ளது. இதனால் ஜன்னல் கண்ணாடி சுக்குநூறாக உடைந்ததோடு, டயர் வெடிப்பது போன்ற பயங்கர சத்தத்துடன் விமானத்திற்குள் இருந்த காற்றின் அழுத்தம்திடீரென குறைந்தது.
ஜன்னல் உடைந்த தீவிர தாக்கத்தால், அதன் அருகே அமர்ந்திருந்த 61 வயதான செர்பிய நாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர், நொடிப் பொழுதில் ஜன்னல் வழியாக விமானத்திற்கு வெளியே இழுக்கப்படத் தொடங்கினார். அவரது தலை மற்றும் தோள்பட்டை பகுதி விமானத்திற்கு வெளியே சென்றதால் உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் உறைந்தனர். நல்வாய்ப்பாக அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், முழுமையாக வெளியே தூக்கி வீசப்படாமல் தப்பினார்.
உடனடியாக அவரது மனைவி கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, சக பயணிகள் ஓடிவந்து அவரை மீட்டு உள்ளே இழுத்தனர். விபத்து நடந்த அடுத்த கணமே சாதுரியமாகச் செயல்பட்ட விமானி, உடனடியாக விமானத்தைத் திருப்பி, அடுத்த 20 நிமிடங்களில் கிளம்பிய அதே விமான நிலையத்தில் அவசர அவசரமாக பத்திரமாகத் தரையிறக்கினார். அதிர்ஷ்டவசமாக அந்தப் பயணி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அதிர்ச்சியில் உறைந்த சக பயணிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
